Sunday, December 21, 2008

அபியும் நானும்

படத்தின் தலைப்பு ஒரு குழந்தையின் கிறுக்கல் போல் இருக்கிறது. அப்படிப் பார்த்தால் அப்பாவும் நானும் என்று தான் இருந்திருக்க வேண்டும். ஏன் அபியும் நானும் ? Well! That says it all. ஒரு குழந்தை பிறக்கும் போது ஒரு அப்பாவும் பிறக்கிறான். குழந்தை வளர வளர அப்பாவும் வளர்கிறான். ஆனால் பல அப்பாக்கள் வளராமலே இருந்து விடுகிறார்கள். அப்படி வளர மறுக்கும் ஒரு அப்பாவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பு தான் அபியும் நானும்.

கண்ணை உறுத்தாத காட்சிகளும் காதை உறுத்தாத வசனங்களும் கொண்ட திரைப்படங்களை மட்டுமே எடுப்பேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரியும் ராதா மோகனின் மற்றுமொரு படைப்பு.

ரகு-அனு இவர்களுக்கு பிறக்கும் செல்ல மகள் அபி. அபியின் மீது பாசத்தை பொழியும் தந்தை ரகு. அபியை பள்ளியில் சேர்க்கும் பொழுது கண்ணீர் விடும் அளவுக்கு பாசம். நல்ல வேளையாக ஏன் இவ்வளவு பாசம் என்று ஒரு flashback வைக்கவில்லை.

ஒரு நாள் அபி ஒரு பிச்சைக்காரனை வீட்டுக்கு கூட்டி வருகிறாள். அவளுக்காக ரவியை குடும்பத்தில் ஒருவனாக இணைத்துக் கொள்கிறார்கள். பின்னொரு நாள் அபி bicycle கேட்க, வாங்கிக் கொடுத்து விட்டு அவள் பின்னாலேயே காவலுக்கு செல்கிறார் ரகு. வளர்ந்து விட்ட அபி, இன்னும் வளராத அப்பாவிடம் சொல்கிறாள்: Dad, I know what I'm doing. இதையே பிற்காலத்தில் பல முறை சொல்ல வேண்டியதாகிறது. அபியின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாத அப்பாவின் தவிப்புகளை அழகாக வடித்திருக்கிறார் ராதா மோகன்.

டெல்லியில் PG படிக்க செல்லும் மகளை பிரிந்து வாடுகிறார் ரகு. படித்து முடித்து விட்டு திரும்பும் அபி ரகுவுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கிறாள். டெல்லியில் தான் சந்தித்த ஜோகி என்பவரை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். இதற்கு மறுக்கும் ரகுவை சமாதானப் படுத்தி சம்மதிக்க வைக்கிறார்கள். திருமணத்திற்காக ஜோகியின் உறவினர்கள் வருகிறார்கள். இவர்களை பற்றி சொல்லப்படும் கதை கொஞ்சம் cinematic. மற்றபடி கதைக்கு ஒரு climax என்று எதுவும் இல்லை.

படம் நெடுகிலும் இழையோடும் ஒரு மெலிதான நகைச்சுவை உணர்வுதான் இப்படி ஒரு கதையில் நம்மை உட்கார வைக்கிறது. வசனங்கள் மின்னுகின்றன.

"பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே ஒரு பிரிவுக்கு ஒத்திகை பார்த்துக் கொண்டேன்" - Simply Superb Vairamuthu.

படம் முடியும் பொழுது சற்றே நீண்டதொரு கவிதையை படித்த உணர்வு மேலோங்குகிறது.

இன்னுமோர் ஆறுதல்: வாரணம் ஆயிரம் போல ஒரு அப்பா இப்படி தான் இருக்க வேண்டும் என்றோ, சந்தோஷ் சுப்ரமணியம் போல ஒரு அப்பா இப்படி இருக்கக் கூடாது என்றோ அறிவுரை கூறவில்லை. வளராத அப்பாக்களே உங்களுக்கு ஒரு heads-up; அவ்வளவுதான்.

காதல் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருப்பவர்கள், இந்த படத்தை பார்க்காமல் இருப்பது நல்லது. ஏன் என்று படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

2 comments:

  1. nanba--- but keep in mind you will never do this mistakes in ur life

    ReplyDelete
  2. Dear collegue Anand,
    I guess you have seen this movie just to find that reason (last para in your review)...

    ReplyDelete