Saturday, February 26, 2011

நானும் மெழுகுவர்த்தியும்

இந்த நல்லவர்கள் சகவாசமே ஆகாது என்று ஓடி வந்தால், இங்கு அவர்களை விட நல்லவர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் நமக்குத் தான் எப்படிப்பட்ட நல்லவர்க்குள்ளும் இருக்கும் கெட்ட குணத்தை வெளிக்கொணரும் கலை கைவந்ததாயிற்றே! அப்பணியைச் செவ்வனே செய்து கொண்டிருக்கிறேன்.

சென்னையிலிருந்து புறப்படும் போது சின்னஞ்சிறு நடுக்கம் ஒன்று மனதில் ஏற்பட்டதென்னவோ உண்மைதான். ஆனால் இங்கு வந்திறங்கிய பின்னர் அந்த நடுக்கம் மனதிலிருந்து உடலுக்கு இடமாற்றம் கொண்டு விட்டது.

எப்போதும் தூக்கத்தைத் தேடி அலையும் நான், முதன்முதலில் தூக்கம் வராமலிருக்க வேண்டிக் கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. என்னதான் இந்நாட்களில் உடல் உறங்கினாலும் மனம் உறங்கும் இரவுகள் என்னவோ இன்னும் பகற்கனவாகத்தான் உள்ளது.

இரவில் தூங்கிக் கொண்டிருக்கையில் திடீரென்று விழிக்கும் பொழுது முகத்தைத் தாக்கும் குளிர், நாம் வேறெங்கோ இருக்கிறோம் என்பதை நினைவுபடுத்துகிறது. அக்கணம் கொடிது. அக்கணத்தை விடக் கொடுமையானது ஒன்று உண்டெனில் அத்தகைய கணத்தை வாழாமலே இறந்துவிட விழைகிறேன்.

சிற்சமயங்களில் இங்கு வர விரும்பியதன் மூலக்காரணத்தை நினைவில் நிறுத்தினால் உதட்டோரம் அரும்பும் புன்னகையை தடுக்க முடிவதில்லை. முயல்வதும் இல்லை. இதனை விட பெரிய மன உளைச்சல் நேராது என்று ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்ளத்தான் முடிகிறதே தவிர கனவு மெய்ப்படுவதே இல்லை.

இன்னும் என்னென்னவோ எழுத வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது. ஆனால் அவ்வெண்ணத்தை நீருக்குள் அமிழ்த்தும் கல்லாக வேறொன்று தடுக்கிறது. சொற்களில் விவரிக்க இயலாத துயரங்களில் சிக்கிக் கொள்கிறேன். இவை நான் தூக்கி வளர்த்த துயரங்களே அன்றி வேறொன்றுமில்லை.

No comments:

Post a Comment