Thursday, March 24, 2011

தோசை

"மனுஷனுக்கு சந்தோஷத்தோட அருமை அத அனுபவிக்கிறப்போ தெரியுறதில்ல", என்று விருமாண்டியில் ஒரு வசனம் உண்டு. இதை எப்போது கேட்டாலும் நான் என்னை மறந்து தலையை ஆட்டுவது வழக்கம்.

சிறு வயதில் அம்மாவும் அப்பாவும் கடை வியாபாரத்தில் மிகவும் மும்முரமாக இருந்த காலங்களில் என்னைப் பள்ளியில் இருந்து நேரே கடைக்குக் கூட்டி வந்து விடுவார் அப்பா. வீடு செல்ல இரவு பத்து மணியாகிவிடும். அதனால் கடையில் வாடிக்கையாக சரக்கு வாங்கும் ஓட்டலில் இருந்து ஒரு பேப்பர் ரோஸ்ட் பார்சல் வாங்கித் தந்து என்னை சாப்பிட வைப்பார்கள். நான் கடையிலேயே சாப்பிட்டு விட்டு தூங்கி விடுவேன். என்னை வீட்டுக்கு கொண்டு வந்து படுக்க வைக்க ரொம்பவும் சிரமப்பட்டு தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

பின்னாட்களில் அம்மா கடைக்குப் போவதை நிறுத்தி விட்டாள். ஆனால் பேப்பர் ரோஸ்ட் சாப்பிடும் பழக்கத்தை தான் நான் விடவில்லை. வீட்டிலும் பேப்பர் ரோஸ்ட் மாதிரியே தோசை சுட்டுக் கொடுத்தால் தான் சாப்பிடுவேன். தோசை தகடு மாதிரி இருக்க வேண்டும். இல்லையென்றால் உள்ளே இறங்காது.

நவீன் பிறந்ததற்குப் பின் "சாதா" தோசைகளை சாப்பிட்டுப் பழகிக் கொண்டேன். ஆனால் பேப்பர் ரோஸ்ட் சுடும் வேலை என்னவோ அம்மாவுக்குத் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. நவீனுக்கும் தோசை ரோஸ்ட் மாதிரி இருக்க வேண்டும். என்ன மாதிரி பிள்ளைகள் வந்து பிறந்திருக்கிறோம் பாருங்கள்.

இந்த பத்தாயிரம் நாட்களில் எனக்கு நினைவு தெரிந்து இதுவரை ஒரு ஏழாயிரம் நாட்களாவது இரவில் தோசை தான் சாப்பிட்டிருப்பேன். சிக்ஸ் பேக் டயட் இருக்கிறேன் என்று ஜம்பம் பண்ணிக் கொண்டு போன வருடம், மூன்று மாதங்கள் ஓட்ஸ் காஞ்சி குடித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் அம்மா போன் பண்ணி, "ஏண்டா தோசை சாப்பிடறியா இல்லியா? அட வாரத்தில ரெண்டு நாளாவது தோசை சாப்பிடு" என்று அக்கறைப் படுவாள். "சரிம்மா, சாப்பிடறேன்" என்று சமாதானப்படுத்தி வைத்து விடுவேன்.

கோடம்பாக்கத்தில் இருந்த மூன்று வருடங்களில் கோவிந்தம்மாளின் சமையலைப் பழித்துக் கொண்டே இருந்தாலும் அவர் சுடும் தோசையைப் பழித்ததில்லை. Infact, தோசை யார் சுட்டாலும் நன்றாகத்தான் இருக்கும்.

இங்கே உட்லாண்ட் ஹில்ஸில் தோசை மாவு கிடைப்பதில்லை. ஊருக்கு போன் போட்ட போது கூட அம்மா கேட்ட முதல் கேள்விகளில் ஒன்று: "சாப்பாடெல்லாம் பிரச்சினையில்லையே? தோசையெல்லாம் கெடைக்குதா?". "பக்கத்தில இந்தியன் ஓட்டல் ஒன்னு இருக்குது; அங்க போனா சாப்பிடலாம்", என்று ஆசுவாசப்படுத்தினேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஐஎஸ்எஸ் போன போது எல்லோரும் வடை பக்கோடா கட்லெட் என்று ஆர்டர் செய்தார்கள். நான் ஒரு மசாலா தோசை வாங்கி சாப்பிட்டேன். தோசையை விட மசாலா தான் அதிகம் இருந்தது, என்றாலும் தோசை சாப்பிட்ட feel கிடைத்ததே. அதுவே ஒரு பாக்கியம்.

இங்கு வந்து இரண்டே நாட்களில் ராஜா வீட்டில் அவருடைய அம்மா தோசை சுட்டுக் கொடுத்தார். நாகரிகம் கருதி மூன்றோடு நிறுத்திக் கொண்டேன். அன்றாடம் தோசை கிடைக்காத இந்த ஊரில் இன்னும் ஒரு வருடம் எப்படி காலம் கடத்தப் போகிறேன் என்று தெரியவில்லை.

1 comment:

  1. தோசை கிடைக்க வில்லை என்று பழி போட வேண்டாம்... வீட்டில் மாவு ஆட்டி சாப்டு டா டேய்!! ;-)

    ReplyDelete