கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங் கொல்லோ உலகு
குறள்: 211டென்னாற்றுங் கொல்லோ உலகு
அதிகாரம்: ஒப்புரவறிதல்
பொருள்: கைம்மாறு கருதாமல் உதவி செய்பவர்கள் மழையைப் போன்றவர்கள்.
வான் சிறப்பை முதலில் பாடிய (கடவுள் வாழ்த்துக்குப் பிறகுதான்) வள்ளுவர், பல்வேறு குறள்களில் மழையை உவமையாக பயன்படுத்தி உள்ளார்.
கோடைக்குப் பின் வரும் தென்மேற்குப் பருவ மழையை விட தீபாவளி சமயத்தில் பொய்க்காமல் பெய்யும் வடகிழக்குப் பருவ மழையைத்தான் எனக்குப் பிடிக்கிறது.
மழை பெய்யும் போது ஏனோ சோம்பலையும் தன்னுடன் கொண்டு வருகிறது. காலையில் எழும் போதே வெயில் இல்லாமல் மேக மூட்டத்துடன் இருக்கும் வானத்தைப் பார்த்தவுடன், அன்று எந்த வேலையும் செய்யக் கூடாது என்று முடிவெடுத்து விடுகிறேன். பிறகு எல்லாமே ஆமை வேகம் தான். கடனே என்று குளிக்க, சாப்பிட, புறப்பட, பள்ளி செல்ல, கல்லூரி செல்ல, அலுவலகம் செல்ல என்று அனைத்திலும் மேக மூட்டத்தின் பாதிப்பு இருக்கிறது. இன்று மழை வருமா, வராமல் ஏமாற்றி விடுமா, வந்தால் எப்பொழுது வரும், சைக்கிளில் செல்லும் போது நனைய நேரிடுமா, என்று எல்லாவற்றிலும் குழப்பம் நீடிக்கிறது.
குழப்பத்தை சகிக்கும் தன்மை (படிக்க: Tolerating Ambiguity) எல்லாம் மழையின் முன்னே செல்லுபடியாவதில்லை. அதுவும் வெளியே புறப்படும் போது மழை பெய்யத் தொடங்கி விட்டால் கொண்டாட்டம் தான். காரணம் தேடும் புத்திக்கு மழை ஒரு திகைப்பான வரமாகவே கிட்டி விடுகிறது.
மாலையில் பெய்யும் மழை என்றால், அது நாளை காலை வரை தொடராதா என்று ஏங்க வைக்கிறது. இரவில் தூங்காமல் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கையில் திடீரென்று கொட்டும் மழை, அது வரை தூங்காமல் இருந்ததற்கு அர்த்தம் கற்பிப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.
இப்படி மழை பெய்யும் தருணங்களில் ஏனோ மழையைத் தாண்டி வானத்தில் என்ன நடக்கிறது என்று அண்ணாந்து பார்க்கிறேன். மழைத் துளிகளைத் தவிர வேறு எதுவும் தெரிவதில்லை.
மழை பெய்யப் போவதையோ வேறு எங்கோ மழை பெய்து கொண்டிருப்பதையோ அறிவிக்கும் மின்னலும் இடியும் காற்றும் தனியாக எங்கேயும் போவதில்லை. வரப் போகிற மழையை வரவேற்கும் மண் வாசனைக்கு ஈடான ஒன்றைத் தேடித் பார்த்து சலிப்பதை விட மழைக்காக காத்திருக்கலாம்.
மழைக்கு முன்னே மேகங்கள் திரளும் வானம் எதிர்பார்ப்புகளையும் குழப்பத்தையும் மகிழ்ச்சித் துள்ளலையும் கொண்டு வருகிறது. மழை பெய்யும் போதோ அந்த எண்ணங்கள் எல்லாம் மறைந்து மழையை மட்டும் அனுபவிக்க வேண்டுகிறது.
இவ்வனைத்தையும் விட மழைக்குப் பின் தெளியும் வானமோ ஒரு வகையான நிம்மதியையும் ஏகாந்தத்தையும் பரிசாகக் கொடுத்து விட்டு நாம் அவற்றை பெற்றுக் கொண்டோமா என்று காத்திருந்து வேடிக்கை பார்க்கிறது. அப்படி இருக்கும் வானம் மழைக்காலம் அல்லாத மற்ற நேரங்களில் இருப்பது போலவே தெளிவாக இருந்தாலும் மழைக்குப் பின் தான் அந்தத் தெளிவை உணரவும் ரசிக்கவும் முடிகிறது.
மிகவும் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteமழைச்சாரல் போல் குளிர்ச்சியாய்!
ஒரு நல்ல கவிதை படித்தது போல இருந்தது
ReplyDelete- Kamal (Dinesh's brother)
மழைக்குப் பின் தான் அந்தத் தெளிவை உணரவும் ரசிக்கவும் முடிகிறது... இதை நானும் பல முறை உணர்ந்திருக்கிறேன். வரிகளாய் படித்ததில் ஒரு இனம் புரியாத ஆனந்தம்!!
ReplyDelete