Thursday, September 1, 2011

அசிங்கங்கள்

இந்தத் தலைப்பில் தமிழில் எழுதக் கூச்சமாகத்தான் இருக்கிறது.  இருந்தாலும் தாய்மொழியில் தான் சொற் பிரவாகம் தடையின்றி வருகிறது.
இக்காலத்தில் அசிங்கங்களை அடையாளம் கண்டு கொள்வது சற்று கடினமாகத்தான் இருக்கிறது.  அதுவும் அழகாக உடுத்திக் கொண்டு நளினமாக நடந்து கொள்ளும் இவற்றை சல்லடைக் கண்கள் கொண்டு தேடினாலும், பிரித்துப் பார்த்தல் அவ்வளவு எளிதன்று.
சூழ்நிலை சரியாக இருக்கும் பொழுதுகளில் இவற்றை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை.  சிறு நிகழ்வுகளில் தட்டுப்படும் போதிலும் சட்டை செய்வதில்லை.  விட்டுக் கொடுக்கிறேன் பேர்வழி என்று இவைகளை வளர விடுகிறோம்.  எதுவும் பெரிதாக இருக்காது என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டு விட்டு விடுகிறோம்.
தொடக்க காலங்களில் நாம் செய்யும் சிறு தவறுகளால் பிற்காலங்களில் பெரிதும் பாதிக்கப்படுகிறோம்.  இப்பாதிப்புகளில் தலையாயது என்னவென்றால், தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் நாமும் அசிங்கமாக மாறிவிடுவதுதான்.
இந்த அசிங்கங்களின் இயல்புகளில் சிலவற்றை நாம் எப்பொழுதும் மனதில் நிறுத்திக் கொள்ளல் வேண்டும்.  நன்றாக நடந்து கொண்டு சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் காலங்களில், எதுவும் இடர்ப்பாடுகள் எழும்போது ஓடி ஒளிந்து கொள்ளுதல், சிறு உதவிகள் தேவைப்படுகிற பொழுதில் என் காரியமில்லை என்று மறுத்து விடுதல், பிறர் நம்மை குற்றம் கூறும் பொழுது என்ன ஏதென்று விசாரிக்காமல் நம்மை மட்டம் தட்டுதல், இப்படி வரிசைப் படுத்திக் கொண்டே போகலாம்.  இதனில் முக்கியமானது என்னவென்றால் நாம் இவைகளை பெரிது படுத்தாமல் மன்னித்து விடுதலே.

அதற்காக அசிங்கங்களை அடையாளம் கண்டு பிடிக்கிறேன் என்று எல்லாவற்றையும் அசை போட ஆரம்பித்தால், கடைசியில் நாமும் இந்த அசிங்கங்களில் ஒன்றாக இணைந்து விடுவோம்.  நம் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட அசிங்கங்களை கண்டும் காணாமல் விட்டுவிடவும் முடியாது.  ஏனென்றால் நாம் நரகத்தில் விழ இருக்கும் காலங்களில் உள்ளே தள்ளி விட முதலில் நிற்பவை இந்த அசிங்கங்களே.
இவைகளின் தன்மை எங்கிருந்து வந்தது, பெற்றோரின் வளர்ப்பினாலா, வளர்ந்த சூழ்நிலைகளாலா என்று ஆராய்ச்சி செய்தல் நமக்குத்  தேவையில்லாத ஒன்று.
இதற்கெல்லாம் என்ன மாற்று என்று நாம் தலையை உருட்டிக் கொள்ள வேண்டியதில்லை.  கால வெள்ளத்தில் ஆங்காங்கே சற்று நின்று இளைப்பாறும் தருணங்களில் நம் வாழ்வில் அசிங்கங்கள் இருக்கின்றனவா என்று மதிப்பீடு செய்து கொள்ளல் வேண்டும்.  இதைக் கூட செய்ய மாட்டேன் என்று தோன்றினால், இடுக்கன்களின் சாத்தியங்களை அதிகப் படுத்திக் கொண்டோம் எனக் கொள்க.

1 comment:

  1. மத்தவங்க அசிங்கம்னு நினைக்கிறதை சொல்றியா? அசிங்கம்கிற வார்த்தைக்கு எந்த அர்த்தமும் இல்லை!

    ReplyDelete