Sunday, November 13, 2011

தேடிச் சோறு நிதந்தின்று

பசித்திரு, தனித்திரு, விழித்திரு, என்று யாரோ ஒரு மகான் சொன்னதில் முதலிரண்டை சரியாகவும் மூன்றாவதை ஓரளவுக்கும் செய்திருக்கிறேன். இந்தப் பதிவில் எதைப் பார்க்கப் போகிறோம் என்று தனியாக அறிவிக்க வேண்டியதில்லை.

போகும் வழிகளில் தென்படும் திருமண மண்டபங்களின் வாசலில், வாழை மரம் கட்டி, அருகே மணமக்கள் பெயர்களைப் பார்க்கும் போதெல்லாம், நம் பெயரைக் கற்பனை செய்து பார்க்கும் சிறுபிள்ளைத்தனமான எண்ணங்களில் நான் உவகை கொள்வதில்லை. உள்ளே சென்று சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்ற உயரிய எண்ணம் மட்டுமே எழுவதுண்டு.

உட்லா
ண்ட் ஹில்ஸில் இருந்த ஒன்பது மாதங்களில், உணவு என்பது வெறும் விரும்பிக் கிடைக்கும் பொருளல்ல, உழைத்து அடைய வேண்டிய ஒன்று என்று தெளிந்து கொண்டேன். இதே பதிவில் இந்த ஊரில் இருக்கும் தனியார் உணவகங்களின் தரத்தையோ சுவையையோ மதிப்பிட ஆரம்பித்தால், எனக்கு அன்புடன் உணவளித்தவர்களை அவமானப் படுத்துவதாக அமையும்.

எங்கள் வீட்டில் கைதேர்ந்த நளபாகர்கள் இருந்தாலும், நரேஷுக்கு மட்டுமே நல்ல மனப்பான்மை(attitude) உண்டு. அவன் சமையலில், இன்று சமைக்க வேண்டுமே என்ற சலிப்பு இருக்காது. இன்று சாப்பிட வேண்டுமே என்ற ஆவல் இருக்கும். மற்ற நாட்களில் சுவையாக சாப்பிட்டும் கிடைக்காத நிறைவு, இவன் சமைக்கும் தினங்களில் கிடைக்கும்.

நான் எதிர்பார்க்காத சமயங்களில் வீட்டுக்கு அழைத்து, சாப்பிட சொல்வதில், ராதாவுக்கு ஒரு வகை திருப்தி கிடைக்கிறது என்றே எண்ணுகிறேன். உணவில் நெய் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று படித்து வந்தவர். நான் எந்த விஷயத்திலும் originality எதிர்பார்ப்பவன். அந்த வகையில் ராதாவுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது. Team Play என்பது burying our differences and working towards a greater cause. இந்த உயர்ந்த கோட்பாட்டைக் கொண்டிருப்பதால், அவர் தட்டில் போடுவதும் நான் சாப்பிடுவதும் தடையின்றி நடக்கும். தேங்காய் சட்னியில் மட்டும் கொஞ்சம் உப்பைக் குறைத்தால் தேவலை.

ஏற்கெனவே தீபிகா என்ற சின்னப் பெயரை, இன்னும் சுருக்கி தீபா என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்வதின் காரணம் என்ன, என்று கேட்டால் சோறு கிடைக்காது, என்ற ஒரே காரணத்துக்காக, இதையெல்லாம் நான் பெரிது படுத்துவதில்லை. சும்மா இருந்த நாட்களில், ஆர்வக் கோளாறில் இவர் படித்த Nutrition course, எங்களையெல்லாம் என்ன பாடுபடுத்துகிறது என்று சொன்னால் புரியாது. அதெல்லாம் பட்டுத் தெரிந்து கொள்ள வேண்டியது. எந்த பண்டத்தை எப்படி சாப்பிட வேண்டும், அது எப்படி உடம்புக்கு நல்லது, என்று இவர் கூறும் அறிவுரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தால், நமக்கு சாப்பிட நேரம் இருக்காது. ஊட்டமிக்க உணவில் சுவையை எப்படி சேர்க்கிறார் என்பது ஆண்டாண்டு காலத்திற்கு பாதுகாக்க வேண்டிய
ரகசியம்.

நான் ஒரு social animal இல்லை என்பதால், வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதனாலேயே பல வீடுகளில் ஓரிரண்டு முறை மட்டுமே சாப்பிட்டிருக்கிறேன். இதனால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், ஸ்வேதா, சுதா ஆகியோர். Success happens when hard work meets opportunity. இப்படி இன்னுமொரு உயர்ந்த கோட்பாட்டைப் பின்பற்றுவதால், என்ன நினைப்பார்கள் என்ற சில்லறைத்தனமான எண்ணத்தை விடுத்து, புகுந்து விளையாடி விடுவேன்.

எனக்குத் தெரிந்த மற்ற நளன்கள், முறையே, அறிவொளி, சிதம்பரம், சுதாகர், ராதா ஊரில் இல்லாத நாட்களில் ராஜா.

இவர்களில் அறிவொளி நிறைய அறிவுத் தாகம் கொண்டவன். சாப்பிடும் வீடுகளில் எல்லாம், "இது எப்படி செஞ்சாங்க?", என்று கேட்டுத் தெரிந்து கொண்டே இருப்பான். அதையெல்லாம் செயல் படுத்துகிறானா என்று தெரியாது. இவனுக்கு நல்ல பசி இருக்கும் நேரங்களில் பொறுமையாக ஒரு மணி நேரத்துக்கு சமையல் செய்து, பசியடங்கி, சாப்பிடாமலே அடங்கி விடுவான்.

இவர்களையெல்லாம் விட பெரிய வித்தகனாக என்னை நானே நினைத்துக் கொண்டாலும், அதிகமாக விளம்பரம் செய்து கொள்வதில்லை. நமக்கு இதெல்லாம் பிடிக்காது.

பாரதியின் இந்தப் பாடல் வரிகளில் ஒவ்வொன்றாக, தொடர்ந்து பதிவு செய்யும் எண்ணம் இருக்கிறது.

1 comment:

  1. //பாரதியின் இந்தப் பாடல் வரிகளில் ஒவ்வொன்றாக, தொடர்ந்து பதிவு செய்யும் எண்ணம் இருக்கிறது

    Interesting..

    ReplyDelete