Saturday, November 26, 2011

மயக்கம் என்ன

செல்வராகவன் படம். அப்படித்தான் இருக்கும். நமக்கு ஒரு படம் பார்த்தா சிரிச்சுட்டு வரணும், இல்ல அழுதுட்டு வரணும், இல்ல ஒரு சேதி (அதாங்க message...) இருக்கணும். இதுல எதுவும் இல்லன்னா படம் ஓடாது. இந்தப் படத்துல நாம எதிர்பார்க்கற எதுவும் இல்ல.

அவ ஒரு செம்மையான (செமையான இல்லங்க, perfect...) பெண்ணும் இல்ல. அவன் ஒரு சிறந்த ஆணும் இல்ல.

முதல் பாதியோட கதைய ரெண்டு வார்த்தையில சொல்லிரலாம். நண்பனின் காதலி. இத இருபது நிமிஷத்துல சொல்லியிருக்கலாம். மீதி கதைய சீக்கிரமே ஆரம்பிச்சிருந்தா இடைவேளையப்போ எல்லாரும் வீட்டுக்கு போயிருவாங்க. அதனாலதான் என்னவோ நம்மள உக்கார வைக்கிறதுக்காகவே (தனக்குத் தேவையில்லைன்னாலும்) முதல் பாதிய இழுத்துருக்கார் செல்வராகவன்.

ரெண்டாவது பாதியில தான் படம் ஆரம்பிக்குது. ரொம்ப நாள் கழிச்சு கணவன் மனைவி உறவு பத்தி விலாவாரியா சொல்லியிருக்காங்க. இதையெல்லாம் நாம பாக்க வேண்டிய அவசியமே இல்லன்னு சொல்றவங்க, இந்த வரியோட Ctrl+F4 அடிச்சுக்கலாம்.

இந்த மாதிரி கம்பி மேல் நடை கதைய சொல்லும் போது ஒரு குறுகியவாத (chauvinistic) வாடை அடிக்கிறத தவிர்க்க முடியறதில்ல. புருஷன் அப்படித்தான் இருப்பான், பொண்டாட்டி தான் அனுசரிச்சு போகணும், அப்படின்னு பத்தொன்பதாம் நூற்றாண்டு வியாக்கனங்கள சொல்ற மாதிரி தான் இருக்கும். ஆனா கொஞ்சம் பரந்த நோக்கோட பார்த்தா, தோத்துப் போன புருஷன் மனைவி மேல தன் இயலாமைய காட்டறது ஒன்னும் புதுசில்ல. தமிழ்நாட்டின் பல வீடுகள்ல நடக்கிறதுதான். இந்தக் காலத்துல, அதுவும் யாமினி மாதிரி சுயமா சம்பாதிக்கிறவங்க, போடா நீயும் உன் லட்சியமும்னு போய்கிட்டே இருப்பாங்க. ஆனா, புருஷன் இப்படி நடந்துக்கிறது தன் மேல இருக்கிற வெறுப்பினால இல்ல, அவனோட இயலாமையினால; அதனால அவன் ஜெயிக்கணும்னு தன்னால முடிஞ்ச அளவுக்கு பாடுபடற அர்ப்பணிப்பு இருக்கே, இதெல்லாம் இனிமேல் இந்த மாதிரி படத்துல மட்டும் தான் பாக்க முடியும்.

படத்துல ரெண்டு பேருக்குமே நடிக்கிறதுக்கு நிறைய வாய்ப்பெல்லை (scope) இருக்கு. தனுஷ் வழக்கம் போல வெளுத்து கட்டியிருக்கார். ரிச்சா தன்னால முடிஞ்ச அளவுக்கு நடிச்சிருக்காங்க. பாராட்டியே ஆகணும். இந்த மாதிரி கதையில visuals (இதுக்கு என்னங்க தமிழ் வார்த்தை?) இன்னும் வீரியத்தோட இருக்கணும். நல்ல காட்சிகள் இல்லாம இல்ல. ஆனா விரல் விட்டு எண்ணிரலாம். எல்லாருக்கும் எல்லாமே வருதா என்ன?

ஷங்கர் யாமினிகிட்ட பேசற காட்சியில என்னை மறந்து கைதட்டினேன். ஆழமான வசனம். இந்த வசனத்துக்கே குடுத்த பதினோரு டாலர் சரியாப் போச்சு. a film by selva raghavan அப்படின்னு போட்ட உடனே கிளம்பிராதிங்க. படத்துல இன்னொரு உன்னதமான காட்சிய இங்க வெச்சிருக்கார் இயக்குனர்.

நல்ல முயற்சி. திரைக்கதையோட நீளத்தைக் குறைச்சு படத் தொகுப்புல இன்னும் கவனம் செலுத்தியிருந்தா படம் வர்த்தக ரீதியிலும் வெற்றி அடைஞ்சிருக்கும். எப்படியோ ஒரு நல்ல படம் பார்த்த நிறைவு இருக்கு.

1 comment: